Wednesday 1st of May 2024 08:10:26 PM GMT

LANGUAGE - TAMIL
.
மன்னாரில் மின் தகன நிலையத்தை அமைக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை! - மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்!

மன்னாரில் மின் தகன நிலையத்தை அமைக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை! - மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்!


மன்னார் மாவட்டத்தில் கொவிட்-19 மரணங்கள் தற்போது அதிகரித்துச் செல்லும் நிலையில் சடலங்கள் வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உடனடியாக மின் தகன நிலையத்தை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள மையினால் மாவட்டத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்.

மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(31) காலை இடம்பெற்ற அவசர கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

நாட்டில் தற்போது கொவிட்-19 தொற்றும் மரணங்களும் அதிகரித்துச் செல்லும் சூழ் நிலையில், மன்னார் மாவட்டமும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்ற வகையில் ஏனைய மாதங்களை விட ஆகஸ்ட் மாதத்தில் கொவிட் தொற்றாளர்களும், மரணங்களும் அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் ஒரே நாளில் நான்கு கொவிட்-19 மரணங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் நாங்கள் இறந்தவர்களின் உடலை மின் தகனம் செய்வதற்கு வவுனியாவிற்கு கொண்டு சென்றோம்.

தற்போதைய சூழ்நிலையில், வவுனியாவில் சடலங்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், ஏனைய மாவட்டங்களில் இருந்தும் சடலங்கள் தகனம் செய்ய வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும் நிலையில் வவுனியாவில் உள்ள மின் தகன இயந்திரத்தின் செயல்திறன் குறைவடைந்துள்ள நிலையிலும், குறித்த விடயம் எமக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தங்களின் முன் அனுமதி இன்றி சடலங்களை வவுனியா தகன நிலையத்திற்கு கொண்டு வர வேண்டாம் என எங்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உடனடியாக மின் தகன நிலையத்தை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அவசர கலந்துரையாடலை இன்று செவ்வாய்க்கிழமை(31) மாவட்டச் செயலகத்தில் ஏற்பாடு செய்தோம்.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இடம் பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக மின் தகன நிலையத்தை மன்னார் நகரசபை பிரிவில் உள்ள மன்னார் பொது மயான பகுதியில் அமைக்க முடிவு எடுத்துள்ளோம்.

மின் தகன நிலையத்தை அமைப்பதற்கும், வாகனத்திற்கு பணம் கொடுத்து சடலங்களை அனைவராலும் ஏற்றி வர முடியாது என்பதினால் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யவும் சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகிறது.

தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகள் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

நிதி போதாமை காரணமாக அரச சார்பற்ற அமைப்புக்கள், வெளிநாட்டில் உள்ள நண்பர்கள், தனவந்தர்கள் முன் வந்து உதவி செய்ய முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE